Press "Enter" to skip to content

முகக்கவசம் அணிவது கட்டாயமா?

நாட்டில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (04) இரவு “டிவி தெரண”வில் ஒளிபரப்பான புதிய பாராளுமன்றம் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம கருத்து வௌியிடுகையில், இந்த நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்று குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று தெரிவித்தார்.

சமீப காலமாக ​​ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வகை நுளம்புகளே சிக்குன்குனியாவுக்கும் காரணமாகின்றன. இந்த இரண்டு நோய்களிலும் அதிக ஆபத்து உள்ளது. தற்போது இன்ஃப்ளூயன்ஸா நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இது வயதான சிலருக்கு கடுமையான நிலைமைகளுக்கும் மரணத்திற்கும் கூட வழிவகுக்கும்.

இதேவேளை, புதிய நாடாளுமன்றம் நிகழ்ச்சியில் முகக்கவசம் அணிவது தொடர்பான தற்போதைய பிரசாரம் குறித்தும் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கினார்.

உங்களுக்கு வைரஸ் சுவாச நோய் இருந்தால், அது மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அறிவித்தலால் சிக்கல் நிலைமை உருவாகலாம். நாம் ஏதாவது ஒன்றைப் பற்றி பொதுமக்களுக்குத் தெரிவிக்க வேண்டுமெனில், நாங்கள் தயங்க மாட்டோம். முகக்கவசங்களை அணிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அதனை அணியவேண்டும் என்று நாங்கள் குறிப்பிடுவோம். ஆனால், இந்த நேரத்தில் அது அவசியமில்லை என்பது தெளிவாகிறது. இது சாதாரணமாகிவிட்டது. எனவே, பெரிய அளவிலான சிக்கல்கள் மற்றும் இறப்புகள் ஏற்படும் சூழ்நிலை இனி இல்லை.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *