Press "Enter" to skip to content

இரண்டாவது நாளாக தொடரும் வேலைநிறுத்தம்

ஐந்து துணை வைத்திய தொழில்களைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் ஆரம்பித்த வேலைநிறுத்தம் இன்று (06) இரண்டாவது நாளாகவும் தொடரும் என்று துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இந்த 24 மணி நேர வேலைநிறுத்தத்தை நேற்று (05) காலை 8 மணிக்கு ஆரம்பித்து இன்று காலை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டது.

இருப்பினும், நேற்று கூடிய துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் நிர்வாகக் குழு, வேலைநிறுத்தத்தை 48 மணி நேரம் வரை தொடர முடிவு செய்தது.

பதவி உயர்வுகள், வார இறுதி மற்றும் விடுமுறை கொடுப்பனவுகள், பட்டதாரி ஆட்சேர்ப்பு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான ஒப்பந்தங்களை புறக்கணித்தல், ஓய்வூதிய நிபந்தனைகள் மற்றும் பயிற்சிகள் போன்ற பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுத்தருமாறு கோரி இந்த வேலைநிறுத்தம் செயல்படுத்தப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று (05) சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட வேண்டுமானால், அவர்கள் முதலில் வேலைக்கு வர வேண்டும் என்று கூறினார்.

அமைச்சரின் கருத்துக்கு, பதிலளித்த துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு, தற்போதைய சுகாதார அமைச்சரின் நேர்மறையான தலையீடு அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாததால் மேலதிக நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகக் கூறியது.

துணை வைத்திய நிபுணர்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அதிக ஆற்றல் இருந்தபோதிலும், பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்குப் பதிலாக, அந்தக் கோரிக்கைகள் அரசியல் நிகழ்ச்சி நிரல்களாக முன்வைக்கப்பட்டு, தவறான வரையறைகள் வழங்கப்பட்டதாக அவர்கள் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்தனர்.

அதன்படி, பிரச்சினைகளைத் தீர்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், முழுநேர மருத்துவ பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக எடுக்கப்பட்ட தன்னிச்சையான நடவடிக்கை காரணமாக, விருப்பமின்றியேனும் இந்த வேலைநிறுத்த நடவடிக்கைகளுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், முந்தைய அரசாங்கங்களின் கீழ் நடந்த சில அரசியல் தொழிற்சங்க இயக்கங்களைப் போல, தற்போதைய அரசாங்கத்தை சங்கடப்படுத்தவோ அல்லது வேறு ஒரு கட்சியை ஆட்சிக்குக் கொண்டுவரவோ இந்த தொழிற்சங்க நடவடிக்கைகள் செயல்படுத்தப்படவில்லை என்று துணை வைத்திய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனவே, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்வதாகவும், மேலும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க சுகாதார அமைச்சரும் செயலாளரும் தலையிட வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *