Press "Enter" to skip to content

எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாடு முழுவதும் எலிக்காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்தே அதிக நோயாளிகள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவின் வைத்திய நிபுணர் துஷானி தபரேரா தெரிவித்தார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விசேட வைத்திய நிபுணர் துஷானி தபரேரா இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

இந்த நோய் ஒரு பாக்டீரியாவால், குறிப்பாக பாலூட்டிகளின் சிறுநீர் வழியாகப் பரவுகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா எலிகளின் சிறுநீர் அமைப்பில் வாழ்கிறது. எலிகள் தண்ணீர் குடிக்கும்போது, ​​அவற்றின் சிறுநீர் தண்ணீரிலோ அல்லது மண்ணிலோ கலக்கிறது. நாம் அந்த மண் அல்லது தண்ணீரை பயன்படுத்தும் போது, மக்களுக்கு இந்த நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். மாவட்ட ரீதியாக இந்த நோயாளிகள் பெரும்பாலும் இரத்தினபுரி, குருநாகல், கேகாலை, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்களில் காணப்படுகிறார்கள். அதே நேரத்தில், பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பற்றி நாம் பேசினால், நெல் விவசாயிகள், சில மாவட்டங்களில் சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் கீரைத் தோட்டங்களில் பணியாற்றுபவர்களை நாம் சுட்டிக்காட்டலாம்.

இதேவேளை, கொழும்பில் உள்ள லேடி றிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் கோசல கருணாரத்ன, இந்த நாட்களில் சிறுவர்கள் மத்தியில் பரவி வரும் காய்ச்சல் தொடர்பான நோய்கள் குறித்து ஊடக சந்திப்பின் போது பின்வருமாறு விளக்கினார்.

இந்த நாட்களில் குழந்தைகளிடையே கடுமையான காய்ச்சல் பரவி வருகிறது. இது புதிய விடயம் இல்லை. ஏனெனில் பருவமழையுடன் காய்ச்சல் உள்ளிட்ட பல நோய்கள் பரவுகின்றன. ஒவ்வொரு வருடமும் இதை நாங்கள் ‘ஷவர் பீவர்’ என்று சொல்றோம். இந்த முக்கிய பிரிவில் நமக்கு மிக முக்கியமானவை டெங்கு, எலிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் சிக்குன்குனியா. அத்துடன் காய்ச்சலுடன் வரும் வயிற்றுப்போக்கு. நான் சொல்ல விரும்பும் மிகப்பெரிய செய்தி என்னவென்றால், உங்கள் குழந்தைக்கு அதிக காய்ச்சல், வாந்தி, வயிற்று வலி அல்லது சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருந்தால், காத்திருக்க வேண்டாம். வைத்தியசாலைக்குச் செல்லுங்கள்.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *