Press "Enter" to skip to content

O/L பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

2024 (2025) – கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.

 

பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.results.exams.gov.lk என்ற இணையத்தளங்களில் பெறுபேறுகளை பெற்றுக்கொள்ள முடியும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இதேவேளை, பரீட்சை மீள் மதிப்பீட்டு விண்ணப்பங்கள் ஜூலை 14 முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும், பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக ஏதேனும் விசாரணைகள் தேவைப்பட்டால், பரீட்சைத் திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1911 க்கு அழைப்பதன் மூலமோ அல்லது பாடசாலை பரீட்சைகள் ஒழுங்கமைப்பு மற்றும் பெறுபேறுகள் கிளையின் தொலைபேசி இலக்கங்களான 0112-785922, 0112-784208, 0112-786616 மற்றும் 0112-784537 ஆகியவற்றின் மூலமோ விசாரணைகளை மேற்கொள்ளலாம்.

2024 சாதாரண தரப் பரீட்சை கடந்த 2025 மார்ச் மாதம் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நாடு முழுவதும் 3,664 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.

இதில் 474,147 மாணவர்கள் தோற்றியிருந்த நிலையில், 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்களாவர்.

இதற்கிடையில், அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் விண்ணப்பங்களை அனுப்புவதற்காக ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அந்தந்தப் பாடசாலையின் பரீட்சை பெறுபேறுகள் பட்டியலைப் பதிவிறக்கி, அச்சிடப்பட்ட பிரதியைப் பெறுவதற்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோல், அனைத்து மாகாண மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களும் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி, அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் தங்கள் பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளீடு செய்வதன் மூலம் பெறுபேறு பட்டியலைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது பார்வையிடவோ வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், இவ்வாறு பெறப்படும் அச்சிடப்பட்ட பெபெறுபேறுகள் பட்டியல், உயர்தர வகுப்புகளுக்கு சேருவதற்கு செல்லுபடியாகும் ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்துப் பாடசாலை விண்ணப்பதாரர்களின் அச்சிடப்பட்ட பெறுபேறுகள் பட்டியல் அந்தந்த பாடசாலை அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் பெறுபேறுகள் பட்டியல் அந்த விண்ணப்பதாரர்களுக்கும் மீள் மதிப்பீட்டிற்குப் பின்னர் வழங்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், பரீட்சைச் சான்றிதழ்களை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இணையவழி மூலம் விண்ணப்பிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *