Press "Enter" to skip to content

ஒன்பதாவது தடவையாகவும் நடைபெறும் ‘சமபோஷ மாகாண பாடசாலை விளையாட்டுப் போட்டி 2025’ 7 மாகாணங்களில் 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகளின் பங்களிப்புடன் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி முதல் ஆரம்பம்

இலங்கையின் மிகவும் பிரபல்யமான தானிய உணவான சமபோஷவின் அனுசரணையுடன் மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘2025 சமபோஷ மாகாணப் பாடசாலை விளையாட்டுப்போட்டி’ மேல், வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா, தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய 7 மாகாணங்களை மையமாகக் கொண்டு ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இதில் 70ற்கும் அதிகமான போட்டிகளில் 3000ற்கும் அதிகமான பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 25,000ற்கும் அதிகமான வீர வீராங்கனைகள் பங்கெடுக்கவுள்ளனர். வெற்றிபெறும் பாடசாலைகள் மற்றும் வீர வீராங்கனைகளுக்கு, பதக்கங்கள், கேடயங்கள், சான்றிதழ்களை வழங்க மாகாணக் கல்வித் திணைக்களத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

CBL உணவுப் பிரிவின் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளருமான திரு.மஞ்சுள தகநாயக்க இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “CBL நிறுவனம் எப்பொழுதும் இலங்கையில் உள்ள சிறுவர்களின் விளையாட்டு மற்றும் கல்விச் செயற்பாடுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, திறமை மிக்க எதிர்கால தலைமுறையை உருவாக்க விரும்புகின்றது. இதற்காக, CBL இன் உணவுப் பிரிவு, சமபோஷ வர்த்தக நாமத்தின் கீழ் ஒரு பெரிய அளவிலான பணிகளைச் செயல்படுத்தி வருவதுடன், இந்த விளையாட்டுப் போட்டி இதில் ஒரு பகுதியாகும். இந்தப் பரந்த தொடர் நிகழ்ச்சியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் மாகாணப் பாடசாலை விளையாட்டுப் போட்டிக்கு நாங்கள் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றோம். விளையாட்டின் மூலம் பாடசாலை மாணவ மாணவியர் பெறும் அனுபவங்கள், அவர்களின் ஒழுக்கம், குழு மனப்பான்மை, பொறுமை, தலைமைத்துவப் பண்புகள் மற்றும் ஆளுமை போன்ற நற்பண்புகளை மேம்படுத்த முடியும் என நாம் நம்புகின்றோம்” என்றார்.
இந்த விளையாட்டுப் போட்டி தொடர்பில் கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சின் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) ஜீ.ஜீ. அனுர விக்ரம, “பாடசாலை மாணவர்களின் திறமையை மேம்படுத்தி அவர்களின் உடல் உள நலனை சுமுகமான முறையில் வளர்ச்சிபெறச் செய்வதற்கும், அவர்களின் திறமையை தேசிய மட்டத்திற்கு உயர்த்துவதற்கும் தேவையான பலத்தை தொடர்ச்சியாக ஒன்பது வருடங்கள் வழங்குவதற்கு CBL சமபோஷ நிறுவனம் வழங்கிவரும் மகத்தான ஒத்துழைப்பை நாம் பாராட்டுகின்றோம்” என்றார்.

இந்தப் போட்டியின் ஆரம்பமாக மேல் மாகாணத்தின் விளையாட்டுப் போட்டிகள் தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் ஓகஸ்ட் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இது குறித்து மேல்மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) எல்.ஏ.டி.தம்மிக்க குலதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “மாகாண விளையாட்டுப் போட்டியின் ஊடாக மாணவர்களின் திறமைக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்பு, பொறுமை, ஒழுக்கம் போன்ற குணாம்சங்களையும் வளர்ப்பதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றது. இதுபோன்ற தேசிய மட்ட விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கு சமபோஷ வழங்கிவரும் ஒத்துழைப்பு மிகவும் மதிக்கத்தக்கது” என்றார்.
ஊவா மாகாண விளையாட்டுப் போட்டிகள் வின்சன்ட் டயஸ் விளையாட்டு மைதனத்தில் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. ஊவா மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திருமதி. தனுஷா விஜயக்கோன் இது பற்றிக் கருத்துத் தெரிவிக்கையில், “அடிமட்டத்திலிருந்து தேசிய மட்டத்திற்கு முன்னேறிச் செல்லத் துடிக்கும் மாணவர்களை உயர்ந்தமட்டத்திற்குக் கொண்டு செல்ல எமக்கு அனுசரணை வழங்கி, இந்த விளையாட்டுப் போட்டிகள் வெற்றியடைய சமபோஷ வழங்கிவரும் ஒத்துழைப்பு மிகவும் முக்கியானது” என்றார்.
தென் மாகாண விளையாட்டுப் போட்டிகள் ஓகஸ்ட் மாதம் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை மாத்தறை கொட்டவில விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த தென்மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திரு.ஆர்.எம்.கிரிஷான் துமிந்த குறிப்பிடுகையில், “தென் மாகாண கல்வித் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்படும் இந்தத் தென்மாகாண விளையாட்டுப் போட்டிகளுக்கு சமபோஷ வர்த்தகநாமத்தினால் மாணவர்களின் விளையாட்டு, கல்வி மற்றும் போஷாக்கு மட்டத்தை மேம்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளுக்கும் நன்றிகள்” என்றார்.

வடமத்திய மாகாணத்தின் விளையாட்டுப் போட்டி அநுராதபுரம் பொதுவிளையாட்டு மைதானத்தில் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. இது பற்றி வடமத்திய மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திரு.கே.கே.சி.டி.போரோகம குறிப்பிடுகையில், “சமபோஷ நிறுவனம் பல ஆண்டுகளாக வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவ மாணவியரின் விளையாட்டுத் திறனை வளர்த்து வருவதுடன், அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தி தேசிய மட்டத்திற்கு முன்னேறுவதற்கான தளத்தையும் உருவாக்கி வருகின்றது. பல்வேறு கஷ்டங்களைத் தாங்கி விளையாட்டுக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட இந்த வீர வீராங்கனைகளைப் பாதுகாப்பதன் மூலம் சமபோஷ வழங்கும் ஆதரவை நான் மிகவும் பாராட்டுகிறேன்” என்றார்.

செப்டெம்பர் மாதம் 03ஆம் திகதி முதல் 07ஆம் திகதி வரை கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டிகள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் இடம்பெறவுள்ளன. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாணப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) திரு.மொகமட் அக்மல் குறிப்பிடுகையில், “பல வருடங்களுக்குப் பின்னர் பாடசாலை விளையாட்டை மேம்படுத்த கிழக்கு மாகாணத்திற்கு வந்த முதலாவது அனுசரணையாளராக சமபோஷ விளங்குகின்றது. இந்த விளையாட்டுப் போட்டி கிழக்கு மாகாணத்திக்கு சிறந்ததொரு வளமாகும். தேசிய தயாரிப்பொன்று நாட்டிலுள்ள பிள்ளைகளுக்காக மேற்கொள்ளும் இந்த சேவை மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுக்கின்றது” என்றார்.

வடமேல் மாகாணத்தின் விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை வென்னப்புவ அல்ப்ரட்.எஃப் பீரிஸ் விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளன. இது தொடர்பில் வடமேல் மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்டு) ஜே.எம்.டி.வசந்த குமார, “பாடசாலை வீர வீராங்கனைகள் புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக அவர்களின் திறன்கள் குறித்து மேலதிகமாக அறிந்து கொள்ளவும், விளையாட்டு வீரர்களாக பெருமையை வளர்க்கவும், அதன் மூலம் இந்த நாட்டிற்கு புகழைக் கொண்டுவரும் சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் சமபோஷ தேசிய மட்டத்தில் வழங்கிவரும் இந்த ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது” என்றார்.

சப்ரகமுவ மாகாணத்தின் விளையாட்டுப் போட்டிகள் செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி முதல் 06ஆம் திகதி வரை ருவன்வல்ல பொதுமைதானத்தில் இடம்பெறவுள்ளன. இது பற்றிக் கருத்துத் தெரிவித்த சப்ரகமுவ மாகாணத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் (உடற்கல்வி மற்றும் விளையாட்) திருமதி. டி.ஏ.டி.சுமிதா தெல்கொட ஆரச்சி குறிப்பிடுகையில், “சப்ரகமுவ மாகாணத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான திறமை மிக்க மாணவ மாணவியர் இந்த விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்கின்றனர். உயர் மட்டத்திலான மாகாண விளையாட்டுப் போட்டியை நடத்துவது வீர வீராங்கனைகளின் மன வலிமையை வளர்ப்பதுடன், இந்த விடயத்தில் சமபோஷ வர்த்தக நாமத்தின் சிறப்பான பங்களிப்பை நாங்கள் மிகவும் பாராட்டுகின்றோம்” என்றார்.
இது பற்றிக் கருத்துத் தெரிவித்த உணவுப் பிரிவின் பொது முகாமையாளர் (விற்பனை) சசி பெர்னாந்து அவர்கள் குறிப்பிடுகையில், “சமபோஷ மூலம் ஊட்டச்சத்து மட்டுமல்ல, தன்னம்பிக்கை கொண்ட புதிய தலைமுறையை உருவாக்குவதே எங்கள் முயற்சியாகும். இதற்கு அமைய, “தினன தருவோ” என்ற கருப்பொருளின் கீழ் இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் பாடசாலை மட்டத்திலான வீர வீராங்கனைகளை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான அடித்தளத்தை அமைப்பதில் சமபோஷவாகிய எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” எனக் கூறினார்.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *