Press "Enter" to skip to content

இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கத்தின் 28ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் 2026/2027 புதிய நிர்வாகக் குழு நியமனமும்

இலங்கை உணவு பதப்படுத்துவோர் சங்கம் (SLFPA) தனது 28ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டத்தை (AGM) கடந்த 2025 செப்டெம்பர் 24ஆம் திகதி கொழும்பில் உள்ள The Kingsbury Hotel இல், அதன் உறுப்பினர்கள் மற்றும் தொழில்துறை பங்குதாரர்களின் பங்களிப்புடன் வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது.

1997இல் தமது உறுப்பினர்களுக்கான வாதிடும் ஒரு குழுவாக நிறுவப்பட்ட SLFPA, இன்று பல்வேறு பாரிய சர்வதேச நிறுவனங்கள் முதல் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) வரை 162 இற்கும் மேற்பட்ட உறுப்பு நிறுவனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் இலங்கையின் உணவு மற்றும் பான பதப்படுத்தும் தொழில்துறையை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றன.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட, ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் (FAO) பிரதிநிதியான, இலங்கையின் உணவுத் துறையில் சுழற்சிப் பொருளாதாரம் (CIRCULAR) திட்டத்தின் (2024–2027) திட்ட முகாமையாளர் கமிலியா அண்ட்ரியா புக்கடாரியு (Ms. Camelia Andria Bucatariu) முக்கிய உரையை நிகழ்த்தினார்.

தமது விளக்கக்காட்சி விவரணத்தில், இலங்கையில் உணவு விரயம், உணவு கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொதியிடல் கழிவுகள் பிரச்சினைகள் உடனடியாகக் கவனிக்க வேண்டியதன் அவசியத்தை Bucatariu வலியுறுத்திப் பேசினார். மாநகர திடக்கழிவுகளில் நகர்ப்புற உணவுக் கழிவுகள் மாத்திரம் சுமார் 56.6% அல்லது தினமும் சுமார் 3,963 தொன் (FAO/IWMI, 2023) ஆக பதிவாவதாக அவர் சுட்டிக்காட்டினார். விநியோகச் சங்கிலி முழுவதிலும் உணவுக் கழிவுகளுக்கும் பிளாஸ்டிக் கழிவுகளுக்கும் இடையிலான தொடர்புகளை அவர் சுட்டிக் காட்டியதுடன், குறிப்பாக உணவுப் பொதியிடலில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று அம்சங்களை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறுகையில், விவசாய உணவு பெறுமதிச் சங்கிலி முழுவதும் சுழற்சிப் பொருளாதார நடைமுறைகளைப் பயன்படுத்துவது விரயங்களைக் குறைக்கும் என்பதோடு, வளங்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதோடு, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என குறிப்பிட்டார். பல்வேறு வலுவான பங்குதாரர்களின் ஒத்துழைப்பின் மூலம் சுழற்சிப் பொருளாதாரக் கட்டமைப்பினுள் உணவுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆகிய இரண்டிற்குமான மூலோபாய நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதன் மூலம், காலநிலை நடவடிக்கை, உணவுப் பாதுகாப்பு மற்றும் இலங்கையில் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்த முடியும் என்பதே அவரது முக்கிய செய்தியாக இருந்தது.

அமைப்பின் விடைபெறும் தலைவரான துசித் விஜேசிங்க, இங்கு சங்கத்தின் பயணத்தைப் பற்றிப் பேசியதுடன் SLFPA இன் வளர்ச்சிக்கு வழிகாட்டிய கடந்த 14 தலைவர்களின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்டார். அத்துடன், Pro Food/Pro Pack 2025 கண்காட்சி மற்றும் வருடாந்த கிரிக்கெட் திருவிழாவின் வெற்றியையும் அவர் இங்கு குறிப்பிட்டார். ஒரு முக்கிய அறிவிப்பாக, SLFPA ஆனது கொழும்பு பொரளை, கோதமி வீதியில் ஒரு பிரத்தியேகச் செயலகம் மற்றும் வசதி மையத்தை நிர்மாணிக்கும் திட்டங்களைத் ஆரம்பிக்கவுள்ளதாக இங்கு குறிப்பிட்டார். இது சங்கத்தின் நீண்ட கால மூலோபாய நடவடிக்கையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.

வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் 2026/2027ஆம் ஆண்டுக்கான புதிய நிறைவேற்றுக் குழு நியமிக்கப்பட்டனர். அதில் C W Mackie PLC நிறுவனத்தைச் சேர்ந்த அருண சேனநாயக்க தலைவராகவும், Neochem International (Pvt) Ltd நிறுவனத்தைச் சேர்ந்த தீபால் டி அல்விஸ் செயலாளராகவும், Unilever Sri Lanka Ltd. நிறுவனத்தைச் சேர்ந்த சஞ்சீவ டி சில்வா பொருளாளராகவும் நியமிக்கப்பட்டனர். இதன் செயற்குழுவில், உடனடி முன்னாள் தலைவரான Trans Continental Packaging Commodities (Pvt) Ltd. நிறுவனத்தின் துசித் விஜேசிங்க, தெரிவுத் தலைவரான நதீஷான் குருகே (Mead Lee Trading Co. (Pvt) Ltd.), 1ஆவது உப தலைவராக வசந்த சந்திரபால (Visvaka Marketing (Pvt) Ltd.), 2ஆவது உப தலைவராக தமித பெரேரா (Forbes & Walker Commodity Brokers (Pvt) Ltd.), 3ஆவது உப தலைவராக ரசிக செனவிரத்ன (Diesel & Motor Engineering PLC) ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். உதவிச் செயலாளராக தினேஷ் அளககோன் (Country Style Food (Pvt) Ltd.) மற்றும் உதவிப் பொருளாளராக சமீர ஜயதிலக (Westmann Engineering (Pvt) Ltd.) ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி அலுவலக பொறுப்பாளர்களுக்கு மேலதிகமாக, பின்வரும் பத்து நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டனர்: நிரோஷ் லலந்த (Ceylon Cold Stores PLC), நிரோஷன் தல்பெத்தடோ (C D De Fonseka & Sons), ஷெரான் டி அல்விஸ் (MA’s Tropical Food Processing (Pvt) Ltd.), சஞ்சீவ நிரோஷன் (SGS Lanka (Pvt) Ltd.), அமில வீரசிங்க (Nestlé Lanka Ltd.), துசித ஏக்கநாயக்க (Anods Cocoa (Pvt) Ltd.), பிரஹர்ஷி விக்ரமசேகர (International Commodity Traders (Pvt) Ltd.), விஜித கோவின்ன (Ceylon Biscuits Ltd.), ரங்கஜீவ ஹெட்டியாராச்சி (Fonterra Brands Lanka (Pvt) Ltd.), குஷான் அமரசிங்க (Finagle Lanka (Pvt) Ltd.).

இந்த வருடாந்தப் பொதுக் கூட்டத்திற்கு, SGS Lanka (Pvt) Ltd, Unilever Sri Lanka Ltd., Hayleys Aventura (Pvt) Ltd ஆகிய நிறுவனங்கள் கோல்ட் அனுசரணையாளர்களாகவும் (Gold Sponsors), Lanka Exhibition & Conference Services (LECS) நிறுவனம் வெண்கல அனுசரணையாளராகவும் (Bronze Sponsor) பங்களித்திருந்தன.

செயலாளர் ஹேமந்த பாலசூரிய நன்றியுரை வழங்கியதைத் தொடர்ந்து, விருந்துபசாரம் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து துறையின் உறவுகளை வலுப்படுத்தும் தொடர்புகளை ஏற்படுத்தும் அமர்வு ஆகியவற்றுடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன.

More from வர்த்தகச்More posts in வர்த்தகச் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *